ஐபோன் திரைப்படம்

ஐபோன்16 புரோ மாக்ஸ் பயன்படுத்தி. நான்கு மும்பை இயக்குநர்கள் தங்கள் குறும்படங்களை எளிதாகவும், தரமாகவும் உருவாக்கி உள்ளனர்.

மும்பை அகாடமி ஆஃப் மூவிங் இமேஜ் (MAMI) – மமி அமைப்பின் ‘ஷாட் ஆன் ஐபோன்’ (MAMI Select: Shot on iPhone) என்ற திட்டத்தின் கீழ் இது நடந்திருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த திட்டம், கொங்கனா சென் சர்மா, விக்ரமாதித்ய மோத்வானே, லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறுகிறது. மமி அமைப்பு மும்பைத் திரைப்பட விழாக்களை நடத்தும் ஒரு பொதுவான அமைப்பாகும்.
திரைப்பட உருவாக்கத்தில் திறன்பேசி படக்கருவிகள், குறிப்பாக ஐபோன் படக்கருவியின் பயன்பாடு, உலகளாவிய சினிமா துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதல் முக்கியமான முயற்சி 2011ஆம் ஆண்டு வந்த நைட் பிஷிங் (Night Fishing) என்ற கொரிய குறும்படமாகும். இதை இயக்கியவர் பாக் சான்-வுக். ஐபோன் 4ல் எடுக்கப்பட்ட படம் இது.
அதன்பின் 2015ஆம் ஆண்டு டான்ஜெரின் (Tangerine) என்ற அமெரிக்க திரைப்படம் முழுவதுமாக ஐபோன் 5S-ல் எடுக்கப்பட்டது. இது சண்டான்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது. இதன்பிறகு, திறன்பேசியில் திரைப்படம் எடுக்கும் வழக்கம் பரவலானது.
இந்த வரிசையில், பெரும் தயாரிப்பு செலவுகள் இல்லாமல், கதையை மையமாகக் கொண்டு, தொழில்நுட்பத்தை துணையாகக் கொண்டு ஐபோனை மட்டுமே பயன்படுத்தி குறும்படங்களை உருவாக்க திரைப்படக்கல்வியைக் கற்றுத்தரும் நிறுவனங்களே ஊக்குவிக்கின்றனர். தற்போதைய மமி மும்பைத் திரைப்படவிழாவில் நான்கு இயக்குநர்கள் ஐபோனில் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டன.
அம்ரிதா பக்சி இயக்கியுள்ள ‘டின்க்டோரியா’ (Tinctoria) என்ற உளவியல் துப்பறியும் படமானது 1859ல் வங்காளத்தில் நடந்த இண்டிகோ கிளர்ச்சியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரோஹின் ரவீந்திரன் நாயர் உருவாக்கிய ‘கொவர்ட்டி’ (Kovarty) என்பது ஒரு தட்டச்சுப்பொறிக்கும் தட்டச்சாளருக்கும் இடையேயான உறவைக்கூறும் கற்பனை நிறைந்த காதல் கதை. ஐபோனின் சிறிய வடிவமைப்பினால், அதை தட்டச்சுப்பொறிக்குள்ளேயே வைத்து படம் பிடித்து, சிறந்த கோணங்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரோஹின்.
சாணக்ய வியாஸ் இயக்கிய ‘மங்யா’ (Mangya) என்பது ஒரு சிறுவனையும் அவன் வளர்க்கும் சேவலையும் குறித்த வாழ்வியல் கதை. இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில், கதிரவன் உதயமாகும் முன் 1,000 அடி தூரம் நடிகரைத் தொடர்ந்து சென்று படம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமான படத்தூக்கிக் கருவிகளை அமைக்க நேரமில்லை. ஐபோன் ஆக்சன் மோட் பயன்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மேலும், காணொளி எடுக்கும் போது காட்சியில் ஏற்படும் அதிர்வுகளை குறைத்து, ஒழுங்காக நிலைத்த காட்சியை உருவாக்குவது (Stabilisation) சவாலாக இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய தமிழ் குடும்பத்தில் உள்ள பெண்களின் அடக்கப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது சீயிங் ரெட் (Seeing Red). இதில் தமிழ் சினிமாவில் காலம் காலமாக கதாநாயகன் மெதுவான நடையில் அறிமுகமாகும் (slow motion) காட்சிகளை தனது படத்தில் கதாநாயகிக்கு வைத்திருப்பதாக கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் சாலினி விஜயகுமார்.
ஐபோன்16 புரோ-வின் 120மிமீ லென்ஸை பயன்படுத்தி கதை, அமைப்பு மற்றும் கருப்பொருளை ஒரே ஷாட்டில் ஒருங்கிணைக்க முடியும் என்று இந்த நவீன இயக்குநர்கள் கூறுகின்றனர்.
இந்த நான்கு குறும்படங்களையும் முழுமையாக எம்ஏஎம்ஐ(MAMI) மும்பை திரைப்பட விழா யூட்யூப் பக்கத்தில் காணலாம். இன்றைய இயக்குநர்கள், விலையுயர்ந்த படக்கருவி, ஒளி உமிழும் கருவிகள் இல்லாமலேயே உண்மையான கதை சொல்லல் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஐபோன் போன்ற கருவிகள், சிறு படைப்பாளிகளுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் கலை மற்றும் ஊடகத்துறையில் எளிய மக்களின் பங்கேற்பையும் இடத்தையும் இவை எளிதாக்குகின்றன. தொழில்நுட்பத்தின் உதவியால், கலை, காலத்தையும், எல்லைகளையும் கடந்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.
தொடர்புடைய இணைப்பு
ஆப்பிள் செய்தி
மமி யூட்யூப் பக்கம்
The post ஐபோன் திரைப்படம் appeared first on செல்லினம்.