Normal view

Received before yesterday

ஸ்பாடிஃபை இசை ஓடையில் தடைக்கற்கள்

17 March 2025 at 13:56
Spotify Premium

ஸ்பாடிஃபை செயலியைப் பணம் செலுத்தி விளம்பரமில்லாமல் பயன்படுத்தும் ஸ்பாட்டிஃபை பிரீமியம் (Spotify Premium) கணக்கில் விளம்பரம் வருவதாகப் புகார் எழுந்தது. தீர்வு காணப்பட்டதாகவும் இல்லை என்றும் மாறி மாறி செய்திகள் வருகின்றன.

Spotify Premium

இன்றைய டிஜிட்டல் உலகில், இசை கேட்க ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக், மற்றும் யூடியூப் மியூசிக் போன்ற பல்வேறு இணையச்சேவைகள் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் இணைய இணைப்பு உள்ள யார் வேண்டுமானாலும், எங்கேயும் எப்போதும்  தங்களுக்கு விருப்பமான பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க முடிகிறது. அவற்றில் பரவலாக பயன்படுத்தப்படும் தளமாக ஸ்பாட்டிஃபை விளங்குகிறது.       2006ஆம் ஆண்டு, தொழில்நுட்ப வல்லுநரான டேனியல் ஏக் மற்றும்  தொழிலதிபரான மார்டின் லோரென்ட்சான்  ஆகியோர் இணைந்து ஸ்பாட்டிபை செயலியை உருவாக்கினர்.

ஸ்பாட்டிபை தளமானது, ஃபிரீமீயம் மாடல் (Freemium Model) என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனர்கள் இலவசமாக விளம்பரங்களுடன் இசை கேட்கலாம் அல்லது சந்தா செலுத்தி விளம்பரமில்லாமல் உயர் தரமான இசையை அனுபவிக்கலாம். இந்த முறை மூலம், கோடிக்கணக்கான பயனர்கள் ஈர்க்கப்பட்டனர். மேலும் இசைக்கலைஞர்களுக்கும் வருவாய் ஏற்படுத்தப்பட்டது.

ஸ்பாட்டிஃபை பிரீமியம் (Premium) வசதியின் முக்கியமான அம்சங்களில் ஒன்று- உங்கள் விருப்பமான பாடல்களை விளம்பரமின்றி கேட்கும் வசதி தான். ஆனால், சமீபமாக சில ஸ்பாட்டிஃபை பிரீமியம் பயனர்கள், பாடல்களை கேட்கும் போது விளம்பரங்கள் ஒலித்ததாக புகார் அளித்துள்ளனர். முதலில் பிப்ரவரி மாதத்தில் காணப்பட்ட இந்த பிரச்சினை, தீர்வு காணப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் தோன்றியுள்ளது என்கிறார்கள். இது தொடர்பாக, ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாதாரர்களுக்கு  சமீபத்தில் ஒரு  கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அவர்களுக்கும் விளம்பர  இடையூறு இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

ஆரம்பத்தில், இதுவொரு தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு (glitch) என கருதி, ஸ்பாட்டிஃபை அதனை விரைவில் சரி செய்துவிடும்  என்று பலரால் கருதப்பட்டது. இந்த பிரச்சனை தோன்றி ஓரிரு நாள்களுக்கு பிறகு  ஸ்பாட்டிஃபை வெளியிட்ட அறிக்கையில், இப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு சில வலைபரப்பு (podcast), அல்லது உள்ளடக்கங்களில் விளம்பர செய்திகள்(Promotional messages) தோன்றலாம் என்று ஸ்பாட்டிஃபை தெரிவித்தது. எனினும் தோராயமாக ஒரு தீர்வு காணப்பட்டதாகத் தெரிகிறது.

ஸ்பாட்டிபை நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் எக்ஸ் தளத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக ஓர் ஆதரவு இணைப்பை (Support Link) வெளியிட்டிருந்தார். அதில், இந்தச் சிக்கலைச் சந்திக்கும் பயனர்கள், ஸ்பாட்டிஃபை செயலியில் இருந்து வெளியேறி மீண்டும் உள்நுழையலாம், இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். இது அவர்களின் கணக்கை மீட்டெடுத்து (Reset) சர்வர் உடன் ஒத்திசைந்து (Sync) செயல்பட உதவும்.  ஸ்பாட்டிஃபை, இதை சரி செய்யும் முயற்சியில், பயனர்களுக்கு விரைவான ஒரு தீர்வை இதன் வழங்கியுள்ளது. இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, ஸ்பாட்டிஃபை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என நம்புவோம்.

ஸ்ட்ரீமிங் சேவைகள், தடையற்ற அணுகல், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சமூக இணைப்புகளை வழங்குவதன் மூலம், இசையை நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாற்றியுள்ளன. இலவச சேவைகள் மிகப்பெரிய பாடல் நூலகங்களை வழங்கினாலும், விளம்பரமற்ற அனுபவம், தடையற்ற, உயர் தர இசையால் பயனர்களுக்கு ஓர் ஆழ்ந்த அனுபவத்தை கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை. 

  • நவீனா

The post ஸ்பாடிஃபை இசை ஓடையில் தடைக்கற்கள் appeared first on செல்லினம்.

❌