யூடியூப் மங்கலாக தெரிகிறதா?

உங்கள் யூடியூப் செயலியில் காணொளிகள் குறைந்த தரத்தில் மங்கலாகத் தெரிகின்றனவா? கவலைப்படாதீர்கள் அது உங்கள் இணைப்பில் உள்ள பிரச்னை இல்லை. உலகம் முழுவதிலும் ஐபோன் பயனர்கள் பலர் இந்தக் கோளாறு ஏற்பட்டதாகப் புகார் அளித்துள்ளனர். யூடியூப் நிறுவனம் இதற்கான தீர்வை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூடியூப்-க்கு என்னதான் ஆச்சு?
அறிவுரை முதல் பொழுதுபோக்கு வரை அனைத்துக்கும் இப்போது உலகம் யூடியூபை நம்பி இருக்கிறது. காணொளிகள், குறுங்காணொளிகள் என யூடியூப் ஒலிக்காத இடமே கிடையாது எனலாம். ஆனால், அண்மையில் இதன் காணொளித் தரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக ஐஓஎஸ் பயன்படுத்துபவர்கள், யூடியூப் காணொளிகள் மற்றும் குறுங்காணொளிகள் அனைத்தும், 144p அல்லது 360p எனப்படும் மிகக் குறைந்த தரத்திற்குத் தானாகவே மாறிக் கொண்டதாகப் புகாரளித்தனர். சிலர், உயர் தர ரகமான 720p அல்லது 1080p தரத்திற்கு மாற்றினாலும், காணொளி மீண்டும் தரம் குறைந்ததாகவும் குறிப்பிட்டனர். சில ஆண்டிராய்டு பயனர்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.
தரக் குறைவு கோளாறுக்குக் காரணம் என்ன?
யூடியூபின் புகார் பெட்டிகள், சமூக வலைதளங்கள் என அனைத்து இடங்களிலும் இந்தப் புகார் பெரும் பேசுபொருளானது. கேள்விகளுக்குப் பதிலளித்த யூடியூப் நிறுவனம், கோளாறு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்ததுடன், தீர்வுக்கான ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான காரணம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இணைய தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து அறிவையும் கொண்டுள்ள சில செய்யறிவு செயலிகளிடம் இதற்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதில், இணையத்தின் வேகத்திற்கு ஏற்ப காணொளியின் தரத்தைத் தானாக மாற்றிக் கொள்ளும் யூடியூபின் தொழில்நுட்பத்தில் (Adaptive Bitrate Streaming) இடறல் ஏற்பட்டிருக்கலாம். யூடியூபின் உள்ளடக்க விநியோக இணைப்பில் (Content Delivery Network) பழுது ஏற்பட்டிருக்கலாம். செயலியின் நவீனத்துவ தொழில்நுட்பத்தில் ஏதேனும் பிரச்னை உருவாகியிருக்கலாம் என்பது போன்ற காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன. காணொளித் தரத்தின் கோளாறு குறித்து யூடியூப் நிறுவனமே உறுதி செய்திருப்பதால், இது பயனரின் இணைய சேவைக் கோளாறு கிடையாது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
என்ன பதில் சொன்னது யூடியூப்?
தரக்குறைவு கோளாறு பற்றிய புகார்கள் எழுந்தவுடன் யூடியூப் குழுமத்தின் நிர்வாகியான கமீலா என்பவர், சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர், சில மணி நேரங்களில் அவரே இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது, இனி எந்தவித தரக்குறைவும் நடக்காது என்று பதிலளித்தார். ஆனால், யூடியூபின் புகார் பெட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக கமீலா பதிலளித்திருக்கிறாரே அன்றி, யூடியூப் அதிகாரப்பூர்வ பதிவாக இதனை வெளியிடவில்லை. எனவே, இனிமேலும் சில பயனர்கள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தற்காலிக தீர்வுகள் உண்டா?
யூடியூப் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாததால் காணொளிகளின் தரம் குறையும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கூகுள் இதற்குச் சில தற்காலிகத் தீர்வுகளை வழங்குகிறது. காணொளியின் தரத்தைத் தொடர்ச்சியாக, நாமே மாற்றி அமைப்பது, யூடியூப் செயலியைப் புதுப்பிப்பது, இணைய இணைப்பை மாற்றிப் பரிசோதிப்பது, மெய்நிகர் தனியார் இணைப்பைப் (VPN) பயன்படுத்துவது, போன்றவை தற்காலிகத் தீர்வுகளாகச் சொல்லப்படுகின்றன. அப்படியும் சரியாகவில்லையெனில் தொடர்ந்து யூடியூப் புகார் பெட்டியில் புகாரளிப்பதும் நல்லது.
சில பயனர்கள் இந்த இடைஞ்சல் சீராகி விட்டதாகக் கூறியுள்ள நிலையில், யூடியூப் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காததால், இது தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- விவேக்பாரதி
The post யூடியூப் மங்கலாக தெரிகிறதா? appeared first on செல்லினம்.