Normal view

Received before yesterday

நிக்கோலஸ் மேயரின் ஷெர்லக் ஹோம்ஸ்

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஆர்தர் கானன் டாயில் என்பது தெரிந்ததே. டாயில் இருக்கும்போதே வேறு பலரும் ஷெர்லாக்கை வைத்து கதைகள் எழுத ஆரம்பித்தார்கள் என்பது அவ்வளவாகத் தெரியாத விஷயம். இன்றைக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பின்புலத்தில் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. என் கருத்தில் யாரும் டாயில் தரத்துக்கு வரவில்லை. இருந்தாலும் பொதுவாக சுவாரசியமான கதைகள். அவற்றில் நிக்கோலஸ் மேயர் எழுதியவற்றைப் பற்றி:

மேயர் ஓரளவு புகழ் பெற்ற எழுத்தாளர்/இயக்குனர். ஸ்டார் ட்ரெக் திரைப்படங்களில் சிலவற்றை இயக்கி இருக்கிறார். அவர் முதலில் கவனம் பெற்றது ஷெர்லக் ஹோம்ஸ் நாவல் –  Seven Percent Solution – வழியாகத்தான். வெற்றி பெற்ற நாவல். அது திரைப்படமாக வந்தபோது அதற்கு திரைக்கதையும் எழுதினார்.

மேயரின் புத்தகங்கள் எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஷெர்லக் ஹோம்ஸ் என்ற பேர் இருந்தால் புரட்டியாவது பார்ப்பேன். மேயர் நாவல்களின் கவர்ச்சி அதில் அவர் அன்றைய பிரபலங்கள், நிகழ்ச்சிகள், நாவல்களை இணைப்பதுதான். உதாரணமாக முதல் நாவலான Seven Percent Solution-இல் உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு கதாபாத்திரம். அவர் ஹோம்ஸுக்கு மனோவைத்தியம் செய்கிறார். இரண்டாவது புத்தகமான Westend Horror-இல் அவருக்கு கேஸ் கொடுப்பவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. ஆஸ்கார் வைல்ட், ப்ராம் ஸ்டோகர் போன்றவர்கள் வருகிறார்கள்.  Canary Trainer நாவலோடு Phantom of the Opera நாவல் இணைக்கப்படுகிறது. Case of the Peculiar Protocols நாவலில் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதி ஷெய்ம் வெய்ஸ்மன் ஒரு பாத்திரம். Return of the Pharaoh நாவலில் டுடன்காமனின் பிரமிட் ஆராயப்படுகிறது.

இதெல்லாம் ஒரு வித name-dropping மட்டுமே. ஆனால் இது மட்டுமே என் கண்ணில் இவற்றை footnote அளவுக்காவது பொருட்படுத்த வைக்கிறது.

Seven Percent Solution (1974) ஓரளவு பிரபலமான நாவல். மோரியார்டி ஹோம்ஸின் கற்பனை, அவரது கொக்கெய்ன் பழக்கத்தால் ஏற்பட்டது, அவரை ஏமாற்றி சிக்மண்ட் ஃப்ராய்டிடம் மருத்துவம் பார்க்கிறார்கள்.

Westend Horror (1976) நாவலில் லண்டனில் ப்ளேக் வரும் சூழ்நிலை.

Canary Trainer (1993) இந்த வரிசை நாவல்களில் சிறந்தது. ஹோம்ஸ் இறந்துவிட்டார் என்று கருதப்படும்போது அவர் பாரிஸ் ஆபராவில் வயலின் வாசிப்பவராக வேலை பார்க்கிறார். பிற்காலத்தில் Phantom of the Opera நாவலை எழுதிய காஸ்டன் லெரோ நாடகக் குழுவின் தலைவர். ஆபரா கட்டிடத்தில் வாழும் Phantom, அவனுக்கு ஏற்படும் காதல், அதன் விளைவுகள் என்று போகிறது.

Case of the Peculiar Protocols (2019) – Protocols of the Elders of Zion என்று கேள்விப்பட்டிருக்கலாம். யூதர்களை அதிபயங்கர வில்லன்களாக சித்தரிக்கும் போலி ஆவணம். ஹோம்ஸ் கண்ணில் அது படுகிறது, அது போலி என்று நிறுவுகிறார். ஆனால் அது வேலைக்காகவில்லை, நம்புபவர்கள் நம்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள். (இன்றும்)

Return of the Pharaoh (2021) நாவலில் எகிப்து பிரமிடுகளில் ஒரு உப்பு சப்பில்லாத மர்மம்.

ஹோம்ஸின் பரம விசிறிகளுக்குத்தான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷெர்லக் ஹோம்ஸ் பக்கம்

❌