255. The Violinist’s Thumb
கொடுத்த வேலையைத் தவிர உறுப்புகள் வேறு எதையாவது செய்தால், மூளை கடுமையான தண்டனை தரும். வயலின் கிடார் போன்ற இசைக்கருவிகளைத் தொழில்ரீதியில் பயன்படுத்தி சில விரல்களை அதிகமாக பயன்படுத்தும்போது, இசையறிவு இல்லாத மூளை ஏதோ தப்பென்று புரிந்து எதிர்வினையாற்றும். என்ன செய்யும் தெரியுமா? தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள். சில விடயங்களை அதிகம் ஆராய தேவையில்லை. பிறகு சூப்பர் சிங்கர்கள் பஞ்சம் வந்துவிடும். இப்புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து அப்படிப்பட்ட புத்தகம் என்று நினைத்தேன். சாம் கின் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிப்பவன் நான். விலைதான் அதிகம். அழகு யுவதிகள் சூழ டிராமில் பயணித்து, மெல்பேர்ன் நகர பல்கலைக்கழக நூலகத்தில் இப்புத்தகம் இருப்பதைக் கண்டுபிடித்து, புரட்டினேன். A T C G. புரியவில்லையா?
வாட்சன் கிரீக் என்ற இருவர் கண்டுபிடித்து சொன்னதாக பள்ளியில் படித்தது. மனித செல்லிற்குள் இருக்கும் உட்கருவில் ஏணிப்படிகள் போல் சுருள் சுருளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சமாச்சாரத்தில் இருக்கும் அமிலங்கள். DNA RNA ஜீன்ஸ் குரோமசோம் பற்றிய புத்தகம் இது. இந்த விடயங்கள் இன்னதென்று தெரியாமல் இந்த நான்கு வருடங்களில் சீரழிந்தவர்கள் பார்த்திருப்பீர்கள். அதனால் பணக்காரன் பட்டியலில் டக்கென்று இடம்பெற்றவர்களைப் படித்திருப்பீர்கள். அப்பறம் விருதுகள். அவர்கள் மனைவிகள் ஓபன் டென்னிஸ் பார்ப்பதைக் குளோசப் படங்களாக ஊடகங்கள் துரத்தியத்தைக் கண்டிருப்பீர்கள். நிகழ்கால எதார்த்தம்!
ஒரு காலத்தில் X குரோமசோம் மட்டும்தான் இருந்தது. அதாவது பெண் மட்டும்தான். பாலினத்தையும் கொண்டிருக்கும் 23வது குரோமசோமில் ஏதோ தவறாகி Y தோன்றி, ஆண் இனம் தோன்றிவிட்டது. தவறை இயற்கை ஏற்கனவே சரிசெய்ய ஆரம்பித்துவிட்டதாக போனவாரம் செய்திகள் செப்பின. அதாவது ஆண் இனத்தைக் களையெடுக்கிறதாம் இயற்கை! உலக அரசியலில் சிக்குண்டாலும் சாமானியனும் அச்சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனுக்குப் புரியும்படி எழுதும் சாம் கீன் புத்தகம் இது.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: The Violinist’s Thumb
ஆசிரியர்: Sam Kean
—————————————————————————————————————————————————————————————————————————
ஒருமட மாதும் ஒருவனும் ஒன்றாகி இன்ப சுகம் கண்டு, ஆண் உயிரணுக்கள் பெண்ணிற்குள் வந்தால், அங்கு பெண்ணின் எதிர்ப்பு சக்தி செல்கள் தடுத்து நிறுத்தும். அவற்றை ஏமாற்றி செல்ல ஏற்கனவே ஆண் சில மாறுவேட வஸ்துகளையும் சேர்த்தே கொண்டுவரும். பிறகு உடன்படிக்கைபடி கருவில் ஒரே ஒரு செல்லாக உயிர்கள் தரிக்கின்றன. அந்த ஒரு செல் எப்படி, கண் காது மூக்கு நகம் முடி மூளை எலும்பு பீழை என்று பல வடிவம் பெறுகிறது? அந்த ஒரு செல்லிற்கு, ஒருபக்க உடலை ஜெராக்ஸ் எடுத்து மறுபக்கமும் இன்னொரு கை கால் வைக்க எப்படி தெரிகிறது? அப்படி இரட்டையாக வைத்தபின்னும் ஒருபக்க சிறுநீரகத்தைக் கொஞ்சம் ஏற்றியும், ஒருபக்க நுரையீரலைக் கொஞ்சம் இறக்கியும் வைக்க எப்படி தெரிந்து கொண்டது? பெண் வயிற்றில் கரு வளரும்போது மருத்துவரிடம் சோதனைக்குச் செல்கிறீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நோய்களின் வரலாற்றைக் கேட்கிறார். மாமனாரின் மொத்த வரலாற்றை எதற்காக கேட்கிறார்? கணவனைவிட அவரின் தந்தைக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் என்ன அப்படி தொடர்பு?
நிறைய இருப்பதால் நேரடியாக இப்புத்தகத்தில் இருந்து சில குறிப்புகளைப் பட்டியலிடுகிறேன்.
- குரோம்சோம்களின் பெயர்கள் 1 2 3 … 23 என எண்கள்தான். ஆனால் ஜீன்களுக்குப் பெயர்களுண்டு என சில உதாரணங்கள் சொல்கிறார் ஆசிரியர். எல்லாம் காரணப் பெயர்கள். தலைப்பிள்ளைகள் இறந்தே பிறக்க காரணமான ஜீன், மூன்றாவது முலைக்காம்பு கொடுக்கும் ஜீன், Pokemon போன்றவற்றை மிகவும் ரசித்தேன்.
- கூட்டி பெருக்கினால் 64 இருக்க வேண்டுமே. ஏன் 20 அமிலங்கள் மட்டும் மனித செல்லிற்குள் இருக்கின்றன? இன்றைக்கு பத்து வயது பையன் கூட பதில் சொல்வான். ஆனால் அதைக் கண்டுபிடிக்க, வெவ்வேறு துறைகளில் பலரைக் கொண்டு 20 குழுக்கள் அமைத்து ஆராய்ந்து நோபல் பரிசு வாங்கி இருக்கிறார்கள்! RNA tie club.
- ஆண் பெண் பாலுறவு. இந்த டிசைனில் அதிகம் சந்தோசம் அடைவது யார்? பாதிக்கப்படுவது யார்? காலங்காலமாக இந்த சந்தேகம் உண்டு. ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்த அர்ச்சுனனைப் பிடித்துக்கூட கேட்டிருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தவர் என்று, இரத்த வெள்ளத்தில் சாக கிடந்த பிதாமகனிடம், பல கேள்விகள் கேட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டபோது, தவறாமல் இடம்பெற்ற கேள்வியிது. அந்த ஆள் அதற்கும் சலிக்காமல் பதில் சொல்லியிருக்கிறார்! Million dollar question! நாம் என்ன கதைகள் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். இயற்கைக்கு ஒரு கணக்குண்டு. கர்ப்பம் கர்ப்பகாலம். ஒன்று இன்னொன்றைப் பாதிக்கும். ஆணுக்கு ஒன்று தேவை என்றால், பெண்ணிற்கு இன்னொன்று. அதைத் தீர்மானிப்பதும் ஒரு ஜீன். விஷமும் ஜீனே, விஷமுறிவும் ஜீனே!
- மனிதன் பாலூட்டியாக உருவெடுத்த போது, இனிமேல் தேவையில்லை என இன்னும் நம்முள் தூங்கிக் கொண்டிருக்கும் ஜீன்களைப் பட்டியலிடுகிறார். குளுக்கோஸ் அடுத்து இன்று நாம் அதிகம் எடுக்கும் சர்க்கரை லாக்டோஸ். பாலில் இருக்கிறது. நம் முன்னோர்களுக்கு அதைச் செரிக்கும் சக்தி கிடையாது. அலர்ஜி. அந்த அலர்ஜி ஜீன் அமைதியாகிவிட்டது. Lactose tolerance. திடீரென யாராவது வந்துவிட்டால் தடால்புடால் என்று எழுந்து சரிசெய்து ஒன்றுமே நடக்காதது போல் இருந்து கொள்கிறோம். சில விலங்குகள் போல் கல்லடி வாங்குவதில்லை. அதிலும் ஒரு ஜீன். பாலூட்டியானதால் ஏற்கனவே இருக்கும் ஜீன்கள் எப்படி திணறுகின்றன என இன்னொரு பட்டியல். வெள்ளைத்தோல் சூரிய ஒளிக்குப் புண்ணாவது ஒரு ஜீனால். தான் வரும் முன் தன் பெருமைகளைச் சொல்லச் சொல்லும் அரசியல்வாதி ஜீன் ஒன்று.
- எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பரம்பரை புகைப்படங்களை மட்டும் வைத்து அறிவியல் படித்த Hapsburg lip!
- பின்னிப் பிணைந்து இரட்டையாகவே சுருள்சுருளாக போகும் DNA, BJP RSS போல் சிக்கிக் கொள்வதுபோல் பார்வைக்குத் தெரிந்தாலும் அவை எப்படி சிக்கிக் கொள்வதில்லை? உச்சி வழுக்கை முதல் கால்நகம் வரை எப்படி சரியான தகவலைப் பரம்பரைக்கு கடத்துகின்றன? Knot theory. அதை இரண்டு முறை படித்துவிட்டு குழம்பிப் போய் திரிந்தேன்! ஒருவேளை தகவல்கள் தவறாக புரிந்துகொள்ளப் பட்டால்? Philadelphia swap.
- வாயும் வயிறுமாய் இருக்கும்போது குங்குமப்பூ அது இதுவென பெண்தான் கருவை ஊட்டி வளர்கிறாள். ஊரான் பிள்ளையை ஊட்டி வளக்கணும்டா, அப்பதான் உன் பிள்ளை தானாய் வளருமென்று ஆணிற்குச் சொல்லிவிட்டு அவனை அடுத்தவேளை பார்க்கச் சொல்கிறது. இப்படி காரியம் முடிந்தவுடன் கடமை முடிந்ததென காலங்காலமாக திரும்பிப் படுத்துக் கொள்ளும் ஆணுக்கும், பிறக்கப்போகும் குழந்தையின் உடல் நலனுக்கும் சம்மந்தமே இல்லையென்ற நம்பிக்கையைப் பொய்யாக்கிய கதை. ஒரு கிராமத்தையே நூறாண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து கண்டுபிடித்த விடயம்!
- ஒத்த சிந்தனையுடைய பெண்களுக்கு ஒரே நேரத்தில் மாதவிலக்காகிறது என்று முடியாட்சிகளில் அந்தப்புர பெண்கள் நம்பியதை முன்னொரு புத்தகத்தில் சொல்லியிருந்தேன். அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்தவைகள் பட்டியலில் இப்புத்தகத்தில் வருகிறது. குரங்குகளை மனிதனுடன் கலப்பது! புனிதரின் இரத்தம் என்று வவ்வாலின் முத்திரத்தை வைத்தது! புலியின் மேல் சிங்கம், சிங்கம் மேல் புலி, உயர்தர ஜீன்களுடன் குடிமக்கள், அசுர பலத்துடன் போர்வீரர்கள், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா. இயேசுவை மீண்டும் உருவாக்கலாம் என்ற பேச்சு வந்தபோது இன்னொரு விஞ்ஞானி சொன்னாராம்: You are trying to bring back one of the few people that are supposed to come back anyway.
- நீங்கள் ஈரல் அதிகம் சாப்பிடுவீர்களா? மூத்திரத்துடனும் முரண்டு பிடிக்கும் விட்டமின் A நல்லவரா? கெட்டவரா?
சாம் கின் புத்தகங்களில் நான் மிகவும் கடினப்பட்டு படித்தது இதுதான். சில பகுதிகள் எனக்கு புரியவில்லை; தேடி புரிந்து கொள்ள பொறுமையும் நேரமும் இல்லை. அவரின் Iceberg surgeons என்ற புத்தகத்தைச் சிங்கப்பூர் நூலகங்களில் கண்டுபிடித்து படித்தேன். இரண்டு கட்டுரைகளுக்கு மேல் ஒட்டவில்லை. வைத்துவிட்டேன். Violinist’s Thumbல் நான் மிகவும் ரசித்த மூன்று விடயங்களுடன் முடித்துக் கொள்கிறேன்.
- ஒரு விலங்கின் ஜீன் இன்னொரு வேறொரு விலங்கின் ஜீனை எப்படி ஆக்கிரமிக்கிறது என்ற கட்டுரை! பிரமித்துப் போனேன். பூனையின் சிறுநீரைப் பார்க்கவே முடியாது என்று கிராமங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பூனையின் உடலுறவைப் பார்த்த அதிர்ஷ்டத்தால் தான் பிரதமரானதாக ஒருவரின் கதையுமுண்டு. பூனைகள் உங்களின் செல்லப்பிராணி என்றால், இப்புத்தகம் உங்களுக்குப் பிடிக்காது! அதுவே பூனைகளின் வெற்றி.
- ஐன்ஸ்டின் மூளையை விஞ்ஞானம் பதப்படுத்தி வைத்திருக்கிறது என்று இயற்பியல் ஆசிரியர் டேவிட் ராஜ் அவர்கள் சொன்னதில் இருந்து தெரியும். இத்தளத்தின் 150வது புத்தகத்தில் ஒருவரி சொல்லாத ஆசிரியர், ஐன்ஸ்டின் மூளைக்கு இப்புத்தகத்தில் ஒரு கட்டுரையே ஒதுக்கி இருக்கிறார். அடேயப்பா!
- இப்புத்தகத்தின் தலை சிறந்த பகுதியே, புத்தகத்தின் தலைப்பைக் கொடுத்த அந்த வயலின் மேதை கதைதான்!
ஜீன் என்பது மொழி வேதியியல் கணக்கு நிகழ்தகவு தேற்றம் விதி அறிவியல் மரபியல் தகவல் வரலாறு வினையூக்கி பெயர்ச்சொல் ஆகுபெயர் மங்களவழக்கு இடக்கரடக்கல் தொகை தளை தலைமுறை வினையாலணையும்பெயர் பணம் அரசியல் நீ நான் அது இது எல்லாம்! ஏழாம் அறிவு படம்போல தலைமுறைக்கு அறிவைக் கடத்த முடியுமா? குலவித்தை கல்லாமல் பாகம்படுமா? ஆட்டுக்கும் அளந்துதான் வைத்ததா கொம்பை? அறிவுடை மாந்தரும் கற்புடை பெண்டிரும் ஒரு சாதியில் மட்டும்தான் பிறப்பார்களா? கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்றொன்றுண்டா? படித்துப் பாருங்கள்!
– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)