வெற்றி பெற்றவர்கள் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் யாரும் வெறும் தோல்வியை அல்ல, படு தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள். இப்போது சட்டென்று எனக்கு ஜாக் மா கதைதான் ஞாபகம் வருகிறது. அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங் பலருக்குத் தெரியும். அமேசான் என்கிற பெரிய சாம்ராஜ்யத்திற்கு நிகரா அலிபாபாவைச் சொல்லலாம். அதை ஆரம்பித்தவர் ஜாக் மா.
பள்ளிக்குச் சென்றது முதல் ஜாக் மாவிற்குப் பரிசாகக் கிடைத்தது தோல்விகள் மட்டும்தான். ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோற்றார். உயர்நிலைப் பள்ளியில் மூன்று முறை. கல்லூரியில் சேருவதற்காக எழுதிய நுழைவுத் தேர்வில் மூன்று முறை. காவல் துறையில் வேலை கிடைக்கவில்லை. தேர்வாகவில்லை. சரி, கே.ஃப்.சியில் எப்படியாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற கணக்கெல்லாம் கனவாகக் கலைந்து போனது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குப் பத்து முறை விண்ணப்பித்துத் தோற்றுப் போனார். இந்தப் பட்டியல் இதோடு முடியவில்லை. ஜாக் மா சோர்வடைந்தது உண்மை. ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை, முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. அவரது விடா முயற்சியும் நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. சீன மொழி பெயர்ப்பாளராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
“அதற்குப் பின்னர் அவர் சீனா திரும்பி, ஆரம்பித்த முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் கூட்டாளியாகச் சீன அரசு நிறுவனம் இணைந்தது. சில மாதங்களில் அந்த நிறுவனத்தை அரசு கையில் கொடுத்துவிட்டு ஜாக் மா வெளியேறினார். தோல்வியும் துரோகங்களும் அவரை விரட்டிக் கொண்டே இருந்தன. மீண்டும் வேலை தேடும் படலம். அரசு வேலை. அமெரிக்கா பயணம். அதற்குப் பின்னர் ஆரம்பித்ததுதான் உலகம் அறிந்த அலிபாபா ஆன் லைன் ஷாப்பிங் இணையம்.
“ஜாக் மாவை விட, அதிகமாகத் தோற்றுப் போகும் சந்தர்ப்பங்கள் நமக்கு அமையலாம். அதற்கு வெற்றி அற்ற வாழ்க்கையை வாழ்வோம் என்று அர்த்தமில்லை. தோல்விகளைக் கையாள்வது லேசுபட்ட காரியம் அல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருப்பது போல் தோல்வியை எதிர் கொள்ளச் சில வழிகள் இருக்கின்றன.
1. தோல்விகள் என்றால் அவமானம் என்கிற எண்ணத்தைக் களைய வேண்டும். தோற்கிறீர்கள் என்றால் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது வாய் வார்த்தைகளாக, எண்ணங்களாக மட்டும் இல்லாமல் செயலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்.
2. நாம் அனைவரும் எப்பொழுதும் சரியான தேர்வைச் செய்வோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தவறான முடிவுகளும் தேவையில்லாத வேலைகளும் குறுக்கிடும். அது சகஜம். சிறிதும் யோசிக்காமல் யூ டர்ன் போட்டு விடுங்கள்.
3. தோல்வி வந்தவுடன், உலகம் இருண்டுவிடும் என்று பயப்படுகிறோம். அது மூடி இருக்கும் கதவுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
4. தோல்வியைப் படிப்பினையாகப் பாருங்கள். தோல்வியைப் போல் சிறந்த ஆசான் வேறு எதுவும் இல்லை. அந்த ஆசானைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
5. தோல்வி மூலம் கிடைத்த அனுபவம் உங்கள் அடுத்த நகர்வுகளைச் சரி செய்யும் . திறமை மூலம் வெற்றி அடைந்தவர்களைவிட, தோல்வியை வரவேற்று கற்றுக் கொண்டவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
6. தோல்வி ஒரு முறை அல்ல எத்தனை முறை வந்தாலும், அடுத்து என்ன என்று யோசிக்க மனத்தைப் பழகுங்கள்.
7. தோல்விக்கு அடிநாதமாக இருக்கும் காரணங்களை ஆராயுங்கள். நோக்கங்களைச் சரி செய்து கொள்ள அது உதவும்.
8. எத்தனை முறை விழுகிறோம் என்பது தோல்வி அல்ல. ஜாக் மாவின் வாழ்க்கையில் ஒரு முறையும் தோல்வியைச் சந்திக்காமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. அவரது விடா முயற்சியை நாம் நகல் எடுத்துக் கொள்ளலாம்.
9. சமூகத்திற்குப் பயந்து, மற்றவர்களின் வசைக்குப் பயந்து எல்லாம் நாம் தோல்வியைப் புறக்கணிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் நான்கு நாள்களுக்கு மற்றவர்கள் வாய்க்கு அவலாக இருப்போம். ஆனால், தோல்வியை ஏற்று முன்னேறும் போது சரித்திரம் படைக்கும் சக்தி கிடைத்துவிடும்.
10. இறுதியாக ஒன்றை மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனத்திற்கு வெற்றியைக் கொண்டாடத் தெரியாது.
ஜாக் மா மட்டும் அல்ல, வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியை விடத் தோல்விகளே நிறைந்திருக்கின்றன. தோல்வியைச் சரியாக ஏற்றுக் கொள்ளுங்கள், கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்.
டாக்டர் சங்கர சரவணன் குறித்து எழுதுகையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை. எனக்கும், பல நூறு மாணவர்களுக்கும் வாழ்வளித்த ஆசிரியர் அவர். நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது, சுட்டிவிகடனுடன் தரப்பட்ட இணைப்பிதழில் பல்வேறு பல்சுவை, பொது அறிவுக்குறிப்புகள் வரிசை கட்டிநின்றன. அவை எனக்கிருந்த மிகக்குறைந்த வாசிப்பிற்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. 90% செய்திகளை முதன்முறையாக அப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்கிற அளவுக்கு நிலைமை. ஆசிரியரான என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாள் கோடை விடுமுறையில் என்னை ஓயாமல் அந்த ‘கையளவு களஞ்சியத்தை’ படிக்க வைத்தார். மீண்டும், மீண்டும் கேள்விகள் கேட்டு பயிற்றுவித்தார். இத்தனை வதைகளுக்கும் விதை போட்ட அந்த நூலின் ஆசிரியரை தேடினேன், ‘டாக்டர் சங்கர சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் கடுமையான கோபம் இருந்தாலும், அந்நூல் என்னைப் புடம் போட்டது. அறிவுத்தாகத்தை வளர்த்தெடுத்தது. சுட்டி விகடனின் ‘சுட்டி குவிஸ் விஸ்’ போட்டிகளில் இருமுறை அரையிறுதி போகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. வேறெந்த தயாரிப்பும் இல்லாமல், ஒரே ஒரு கையளவு களஞ்சியத்தைக் கொண்டு வாள் சுழற்றி தோற்றுத் திரும்பினோம்.
காலங்கள் உருண்டோடின. குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனாக முதல் முறை மோசமான முறையில் தோற்றுப்போய் இருந்தேன். துவண்டு போய், திக்கற்று அமர்ந்திருந்த காலம். என்னுடைய ஏதோவொரு கட்டுரையை படித்துவிட்டு டாக்டர் சங்கர சரவணன் சார் என்னோடு பேச விரும்புவதாக சொன்னார்கள். தமிழிலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த எனக்கு உற்ற ஆசிரியராக அவரே இருப்பார் என்று அதிகாரிகள் வழி சொன்னார்கள். அவரின் உதவி நாடி சென்றேன். என்னைப்பற்றி ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டார். வினாடி வினா வல்லுநரான இவர் நம்மை கேள்விகளால் துளைக்கப்போகிறார் என்று அஞ்சினேன். அதற்கு மாறாக, அப்படியே அரவணைத்துக் கொண்டார்.
ராணிப்பேட்டையில் ஆராய்ச்சி அலுவலராக இருந்த அவர், காலையில் எனக்கு மட்டும் தனியாக தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுப்பார். பின்தங்கியிருந்த என்னை கைதூக்கி விடுவதற்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளும் 6:30 மணிக்கு காலையில் வகுப்பெடுப்பார். சில மாதங்கள் இப்படியே சென்றது. பின்னர் அவருடைய பொதுவான தமிழ் வகுப்புகளில் என்னை மாணவனாக இணைத்துக்கொண்டார். ஒருநாள் கூட கட்டணம் என்று ஒரு ரூபாயை கூட அவர் கேட்டதில்லை. கைம்மாறு கருதாத கடப்பாடு என்பதன் உண்மைப்பொருளை அவரிடமே கண்டேன்.
உடல்நலம் குன்றி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில்லாமல் நேரடியாக கேட்டதையும், நினைவில் இருந்ததைக் கொண்டும் தேர்வை அணுகினேன். தமிழ் விருப்பப்பாடம் முதல் தாளினை இயன்றவரை எழுதி முடித்திருந்தேன். 50 மதிப்பெண்களுக்கான பதில்களை தரமுடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிய வெவ்வேறு பதில்கள் தவறானவை என்பதை பிறரோடு நிகழ்த்திய உரையாடலில் புரிந்துகொண்ட போது அழுதுகொண்டே தேர்வை எழுத வேண்டாமென தோன்றியது. சரியாக சார் அழைத்தார். என்னுடைய மனநிலையைப் புரிந்து கொண்டார். சற்றுகூட கடுமை காட்டாமல், நான் தவறாக எழுதிய பதில்களையும் சரியென நம்பவைத்து இறுதிக்கோட்டை தொட்டுவிட்டு வா என ஊக்கப்படுத்தினார். அவர் அன்றைக்கு பேசிய அந்த அரைமணி நேரம் என் வாழ்வின் திருப்புமுனை. இன்றைக்கு நான் ஆட்சிப்பணியில் இருப்பதற்கு முழு முதன்மையான காரணம் அவரன்றி வேறு யாருமில்லை.
டாக்டர் சங்கர சரவணன் சாரோடு வெவ்வேறு காலங்களில், பணிகளில் அருகே இருந்து கற்றுக்கொள்ளும் பேறு கிடைத்திருக்கிறது. ‘பிரமிப்பு’ என்பது கூட போதுமான சொல் அன்று. விகடன் இயர் புக்கை எந்த பொருட்பலனும் எதிர்பாராமல் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று ஒற்றை மனிதராக பல ஆண்டுகள் இயற்றி அளித்தார். உறக்கமின்றி, இற்றைப்படுத்தி மிக நேர்த்தியாக, மாணவர்களின் தேடலுக்கு தீனி போடும் வண்ணம் அப்படைப்புகள் இருக்கும். இளைஞர், மூத்தோர் பட்டாளம் உடன் இவரே தனி மனித இராணுவம் போல பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை வரைவார். போட்டித்தேர்வு சார்ந்து தேர்வு பாகுபாடு இன்றி பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார். உலகத்து செல்வமெல்லாம் தமிழிற்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் பணிகள் தமிழ் அறிவியக்க வரலாற்றில் தன்னேரில்லா பக்கங்கள். உருவான பல்வேறு நூல்களின் மொழியாக்கம், செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரின் பங்கு அளப்பரியது. தமிழ்மொழியின் பழமைக்கும், நவீனத்துக்கும் என்று இரண்டுக்கும் ஈடுகொடுத்து அவரளவிற்கு கற்றறிந்தவர்கள் இல்லை என்றே துணிந்து எழுதுவேன். கால்நடை மருத்துவராக இருப்பது தாஜ்மகாலின் முதல் கதவு போலத்தான். உள்ளே செல்ல செல்ல அவரின் ஆளுமை பரந்து, விரிந்து கொண்டே சென்று ஆச்சரியப்படுத்தும்.
டாக்டர் சங்கர சரவணன் சாரிடம் எனக்கும், பலருக்கும் நெருக்கத்தை தருவது அவரின் பாகுபாடுகளற்று பழகும் பண்பு. மேலும், நம்மை கனிவாக, நேர்மையாக ஆற்றுப்படுத்தும் ஆளுமை. உழைப்பிற்கும், வாசிப்பிற்கும், அறிவு ஊக்கம் மிக்க ஆக்கங்களுக்கு அஞ்சாத ஆள்வினை உடைமை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளின் மீது பெரும்பற்று கொண்ட வைகறை வாசகர்.
சாரின் இணையர் உஷா அம்மா என்னைப்போல் பலருக்கு இன்னொரு அம்மா. சாரின் பொருள் நாடா அறவாழ்விற்கு அருந்துணை. எனக்குத் தெரிந்து போட்டித்தேர்விற்குத் தயாராகும் மாணவருக்காக வீட்டின் மேல்பகுதியை ‘எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்து படிக்கட்டும்’ எனச்சொல்கிற உஷா அம்மாவின் ஒப்புரவிற்கு இணையுண்டா? மாணவர்களுக்காக தன் நேரம் அனைத்தையும் தரும் டாக்டர் சங்கர சரவணன் சாரிற்கு அம்மாவை விட உற்ற துணை யாருமில்லை.
பல்வேறு பார்வைகளை ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ காலத்தில் வைகைறைப்பொழுதில் எழுதிய அவரின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ 2k kids-ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது. ஒரே மூச்சில் படித்தல் ஒரு சுவை. எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொரு கட்டுரையும் சுருக்கமும், நெருக்கமும் மிக்கவை. போலியான பிம்பங்கள், முகமூடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தது, தன்னை பீடித்தது என்று அனைத்தையும் அள்ளித்தருகிறார்.
தன்வரலாற்று பக்கங்களாக சில கட்டுரைகள் அமைகின்றன. அவற்றில் மென்மையான நகைச்சுவையும், சமயங்களில் அழவைக்கும் சோகமும் இழையோடுகிறது. வயது வந்தோருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையை குறுக்கெழுத்துக்காக தந்தையிடம் கேட்டறிந்ததை சொல்லும் கட்டுரை ஒரு சான்று. அதுவரை குலுங்க, குலுங்க சிரிக்கும் நம்மை ஒரே வரியில் சோகமயமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சத்தியம் செய்து சில செய்திகளை சொல்கிறார். கீர்த்தி சுரேஷின் அன்னை குறித்து தேடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் வரும் ‘சின்ன c ஆ, பெரிய C ஆ’ ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு இந்நூலில் சார் நிகழ்த்தும் ‘C’ மாயத்தை நீங்கள் படித்துதான் பரவசமடைய முடியும்.
‘கலைச்சொல்லாக்கம்’ குறித்த ஏழு கட்டுரைகள் தமிழால் முடியும் என்பதை ஆழமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், தெளிவோடும் எடுத்து வைக்கும் கட்டுரைகள். ‘Mutation’ என்பதற்கு இணையான கலைச்சொல்லை கண்டடைய கந்த சஷ்டி கவசம், தாவரவியல் நூல்கள், நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை விரைவு என வைகறை வாசகன் நிகழ்த்தும் தேடல் நெகிழவைக்கிறது. ஆலங்குடி வங்கனாரும், ஆண்டன் செக்காவும் ஜெர்மனியில் ஜோதிகா, அதிதி ராவை சந்தித்த கதை இந்நூலில் நமக்காக காத்திருக்கிறது.
இந்நூலில் தோல்வியில் துவண்டு, நைந்து போகிறவர்களை கரைசேர்க்கும் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்கள் அணிவகுக்கின்றன. இலக்கிய படைப்பாளிகள் குறித்து வெவ்வேறு சிந்தனைச் சிதறல்களை அள்ளி வழங்கும் ஆசிரியரிடம் குறுங்குழு மனப்பான்மையோ, தூய்மைவாத கண்ணாடியோ இல்லாமல் இருப்பது நிறைவளிக்கிறது.
அம்மா குறித்த பதிவுகள் ஆன்மாவில் இருந்து எழுதப்பட்டவை. மகளிர் உரிமைத்தொகை ஆனது உரியவருக்கு சென்று சேர வேண்டும், தகுதியில்லாதவர்கள் பயன்பெற்றுவிடக்கூடாது, விடுபட்டுப்போனவர்களின் குறைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று சங்கர சரவணன் சாரின் அம்மா காட்டும் அக்கறை அம்மாக்களுக்கே உரியது. சமயங்களில் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் வண்ணம் சில பதிவுகள் நின்றுவிடுகின்றன.
திருக்குறள் குறித்து நூலில் வழங்கிவருபவை கண்மூடித்தனமான வழிபாட்டுப் பரணிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, மாறிவரும் அறிவுக்கு அழுத்தம் தராமல், மாறாத மெய்யறிவுக்கு அதிக அழுத்தம் தந்து இலக்கியல், இயங்கியல் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதியதால் தான் குறள் காலம், இடம் ஆகிய பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக இருக்கிறது என்கிற வா.செ. குழந்தைசாமியை கருத்தை நினைவுக்கூர்வது ஒரு சான்று. திருக்குறளில் நேர்நிலை இயல், இருத்தல் இயல், பின்நவீனத்துவம், பெண் விடுதலை, மரண தண்டனை, நிர்வாகத்தில் ரகசிய காப்பு ஆகியவை பல்சுவைக்கதம்பம் மட்டுமல்ல, பன்முகப்பார்வையும், புதுமை நோக்கும் கொண்டவை.
இந்நூலின் ஆகப்பெரிய வெற்றி என்பது, “எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது பார்!” என்கிற பெருமிதப் பூச்சு எங்கும் இல்லவே இல்லை. ‘அன்புத்தோழமையே! உன்னோடு பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுவைகூட்டி பரிமாற சங்கதிகள் உண்டு. மனதோடு உரையாட நூல்கள் சில கண்டேன். பிடித்திருந்தால் சேர்ந்து தேடுவோம். கண்டடைவதை எனக்கும் தெரிவிக்கவும். அறிவுக்கடல் எங்கும் அன்போடு மூழ்கி முத்தெடுப்போம்’ என்கிற நெருக்கமும், பிணக்கமும், அறிவினை விரிவு செய்யும் பொதுமை நோக்கும் மிளிர்கிறது. வைகறை வாசகனின் பதிவுகள் விடியல்களை நமக்களிக்கும் அறிவுப் பெருவிருந்து.
‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல்.
இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.
இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம்.
இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன. சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட.
கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார்.
டாடா சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய் செலவில் பெரிய ஏரி ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது.
ரத்தன் டாடா ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது.
ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர் ஸெர்ஸேஸ் தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள்.
கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா தன்னுடைய மனைவி மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள் தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது.
ஏர் இந்தியாவை டாடா நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது.
IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு.
இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள் வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.
டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ் என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார். வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது.
இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார். 13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,
” ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது.முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும்.
எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது.
தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.
சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”
‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும். யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்: https://www.bbc.com/tamil/india-62246095.
அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக் குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.
பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். “… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’
இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன் பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.
இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால் தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.
தன்னறம் நூல்வெளி வெளியீடு நன்கொடை : ரூபாய் 150 அலைபேசி: 9843870059