Normal view

Received before yesterday

259. சிறகடிக்கும் சருகுகள்

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 7

வெளிநாடு சுற்றுவதற்கு என்றே வருமானத்தில் ஒரு பங்கு ஒதுக்கி வைப்பவன் நான். ஊரடங்கு காலத்தில் தேங்கிப் போன கணக்கைச் சமன்செய்ய சென்ற ஆண்டு மட்டும் ஐந்து வெளிநாடுகளைத் தனியாகவே வழக்கம் போல் சுற்றினேன். எப்போதும் என்னுடன் வருபவை என் நிக்கான் கேமராவும், ஒரு நல்ல புத்தகமும். 2017ல் அங்கோர் வாட் சென்றபோது, சாகித்ய அகாடமி வென்ற ஒரு தமிழ்ப்புத்தகம் உடன் வந்தது. மலேசிய விமான நிலையத்தில் கிட்டத்தட்ட குப்பைத்தொட்டியில் போடப்போனேன். எனவே என் பயணங்களுக்கான புத்தகங்களைத் தேந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். கலந்தீமையால் பால் திரியக் கூடாதல்லவா! சென்ற வருடம் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு சென்ற போது, குறும்பயணம் என்பதால் புத்தகம் எதுவும் எடுத்து செல்லவில்லை. உஸ்பெகிஸ்தானுக்கும், கசகஸ்தானுக்கும் ‘பாகீரதியின் மதியம்’. பிலிப்பைன்ஸ் சென்ற போது அந்நாட்டிற்கான Lonely Planet புத்தகம். கடைசியாக தாய்வான் சென்றபோது, சிறகடிக்கும் சருகுகள்.

தலைப்பே ஈர்த்தது. குறும்புதினம். புரட்டினால் ஆங்காங்கே ‘இலை’ ‘சருகு’ போன்ற வார்த்தைகளை மாற்றிப்போட்டு உள்தலைப்புகள். இன்று பக்கங்களை முடிவு செய்து புத்தகங்கள் எழுதும் நவீன எழுத்தாளர்கள் பலர், தலைப்பிட மொழியறிவு இல்லாமல் எண்களிடும் கொடுமைகளுக்கு நடுவில் இப்புத்தகம் வித்தியாசமாகப்பட்டது. முன்னுரையில் தான் வயதானவன் எனவும், எழுத வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதியதாகவும் ஆசிரியர் சொல்லியிருந்தார். முதல் அத்தியாயம் மட்டும் படித்துப் பார்த்தேன். ஒரே மகளுடன் சண்டை போட்டுக் கொண்டு, மருமகனைக் கூட்டிப் போய் முதியோர் இல்லத்தில் சேர்வதாக ஒரு முதியவர் கதை சொல்கிறார். இரண்டாவது அத்தியாயமும் படித்தேன். உண்மைக்கதையின் தழுவல். இக்கதையோட்டம் கண்டிப்பாக ஒரு பெண்ணை இழுத்து வந்து, பெரும்பாலான இலக்கியங்கள் செய்வது போல, ஆடையுரிக்கப் போவதில்லை. எழுத்துப் பிழைகள் ஏராளம். அதன் நோக்கம் சரியென்பதால், என்னுடன் தாய்வானுக்கு எடுத்து சென்றேன்.

முதியோர் இல்லம். அதில் ஒன்றிரண்டு பேரின் பிளாஷ்பேக். அதை நடத்தும் டாக்டரின் கதை. அவ்வில்லத்திற்கு எதிராக சில சதிகள். அதை அந்த முதியவர்களே முறியடிக்கும் எளிய கதை. புது வீடு கட்டுபவர்களுக்கு உள்ள ஒரு பிரச்சனையைச் சொன்ன ‘மதில்’ என்ற திரைப்படத்தில் இருந்த ஒரு குறை இப்புத்தகத்தின் கதையிலும் உண்டு. பிரச்சனைக்கான தீர்வாக அவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் முழுக்க முழுக்க சினிமாத்தனம் போல் இருக்கும். கிட்டத்தட்ட விசு திரைப்படங்கள் போல. அதை மட்டும் சகித்துக் கொள்ளுங்கள். நம்மில் பலர் சமாதிக்கு முன் முதியோர் இல்லம் விசயம் செய்ய வாய்ப்பு பிரகாசமாய் இருப்பதால், அதன் அரசியல் கொஞ்சம் அறிவது நலம். கண்டிப்பாக படிக்கலாம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: சிறகடிக்கும் சருகுகள்
ஆசிரியர்: மா.சாமுவேல்
வெளியீடு: வேரல் புக்ஸ்
பக்கங்கள்: 195
விலை: ரூபாய் 250
—————————————————————————————————————————————————————————————————————————

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

❌