266. BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 14
ரஷ்யா. இன்றைய உலகின் மிகப்பெரிய நாடு. உடையாமல் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது இன்னும் மிகப்பெரிய நாடு. உலக வரைபடத்தை நீளவாக்கில் வைத்து 24 துண்டுகளாக வெட்டினால், ஒவ்வொரு துண்டையும் கடக்க சூரியன் ஒருமணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் Time zone என்று பெயர். இந்தியாவைச் சூரியன் கடந்துபோக 2 மணிநேரத்திற்கு மேலாகும். ரஷ்யாவைக் கடக்க 11 மணிநேரமாகும்! அதாவது ரஷ்யாவின் கீழைக் கடைசி குடிமகன் இரவு தூங்கப் போனால், மேலைக் கடைசி குடிமகன் காலையில் அப்போதுதான் கண்விழிப்பான். ஆசியா ஐரோப்பா என இரு கண்டங்களில் பரவிய பெரிய நாடு. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கஜகஸ்தான் நாட்டு எல்லைவரை செங்குத்தாக நீளும் உரல் (Ural) என்ற மலைத்தொடர் உண்டு. அதுதான் இவ்விரு கண்டங்களுக்கான வரப்பு. மேற்கே ஐரோப்பிய ரஷ்யா, கிழக்கே ஆசிய ரஷ்யா. சிந்து நதிக்கு அப்பால் உள்ளதெல்லாம் இந்தியா எனவும், சிரியாவுக்குத் தெற்கே இருப்பதெல்லாம் பாலஸ்தீனம் எனவும் அன்றைய உலகம் பெயரிட்டது போல, ரஷ்யா என்றால் பொதுவாக ஐரோப்பிய ரஷ்யா தான். ஆசிய ரஷ்யாவிற்குத் தனியே ஒரு குணமுண்டு, அதற்குச் சைபீரியா என்றொரு பெயருண்டு.
ஐரோப்பிய மாஸ்கோ நகரில் இருந்து, ஆசிய பசிபிக் கடற்கரை நகரான விளாடிவாஸ்டாக் வரை இரயிலால் இணைக்க அன்றைய ஜார் மன்னர்கள் ஓர் இரயில்பாதை திட்டம் கொண்டுவந்தார்கள். 9289 கிமீ. 8 time zones. அதாவது சூரியன் கடக்கவே 8 மணிநேரமாகும். மனிதன் இரயிலில் கடக்க இன்றைக்கு 8 நாட்களாகும். 26 ஆண்டுகள் கட்டினார்கள். கட்டி முடித்தபின் ரஷ்யப்புரட்சி வந்தது. உலகப்போரும் ஜார் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலும் சைபீரியாவின் குறுக்கே செல்வதால் Trans-Siberian railway என்று பெயர். இன்றுவரை மிகநீளமான இரயில்தடம் இதுதான். ஒரே இரயிலில் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய, உலகின் மூன்றாவது நீண்ட பயணமும் இதுதான். ஒருகாலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் முதல் விளாடிவாஸ்டாக் வரை ஓடிய இரயில் பயணம்தான் உலகின் மிக நீண்டது. மாஸ்கோ முதல் வடகொரியா தலைநகர் பியொங்யாங் வரை ஓடும் இரயில்தான் இரண்டாவது இடம். இவை இரண்டும் Trans-Siberian railway வழியேதான் போகின்றன. உலகில் மிக நீண்ட தூரம் போகும் இரயில்கள் எல்லாமே Trans-Siberian railway ஒட்டியவை.
Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து மங்கோலியா நாடு முழுவதும் ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Mongolian என்று பெயர். Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து சீனாவின் ஊடே ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Manchurian என்று பெயர். எனவேதான் உலகப்பயணிகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறது Trans-Siberian railway! பயணிகள் கவனத்திற்கு, கன்னியாகுமரி முதல் திப்ருஹர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட இரயில் பயணம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
ஆசிரியர்: Emma Fick
வெளியீடு: Harper Design
பக்கங்கள்: 236
—————————————————————————————————————————————————————————————————————————
நானும் ஓர் உலகப்பயணி என்பதால் Trans-Siberian railway பயணம் பற்றி புத்தகங்கள் தேடினேன். BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway. ஆசிரியர் Emma Fick. பீஜிங் முதல் மாஸ்கோ வரை Trans-Mongolianல் 26 நாட்கள் ஆசிரியர் பயணித்த கதைதான் இப்புத்தகம். பயணம் என்ற பெயரில் இன்று யூடியூபில் காணொளிகளாக வெறும் குப்பைகள். யூடியூப்பில் கம்போடியா / உஸ்பெகிஸ்தான் நாடுகளை விளக்கும் விதத்தில் நான் குப்பைகளை எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். இப்புத்தகம் அமைக்கப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டு எடுத்துவந்து விட்டேன். பயணத்தின் போது, டைரியில் குறிப்புகள் எடுப்பது போல, முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட படங்களாலும், கையால் எழுதி விளக்குவது போலவும் எழுதப்பட்ட புத்தகம் இது. சில பக்கங்கள் படிக்கவே தேவையில்லை, பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்தாலே போதும். படங்களே பெரும்பாலான பயணத்தின் கதையைச் சொல்கின்றன.
(www.amazon.com)
நிறைய குறிப்புகள் எடுத்திருக்கிறேன். சீன எல்லையில் தண்டவாள அகலம் மாறும்போது, இரயிலையே தூக்கி சக்கரங்களை மாற்றும் விசித்திரம் படித்தேன். பழைய பாஸ்போர்ட்டில் விசா இருந்தால் அனுமதிக்காத உலகின் மிகமிக சில நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்குள் ஆசிரியர் அனுமதிக்கப்படாமல், மீண்டும் மங்கோலியா திரும்பி புது பாஸ்போர்ட்டில் விசா வாங்கி பயணித்த கதையை மறக்கமாட்டேன். பெண்கள்தான் செயற்கரியன செய்து சமகாலத்தில் என்னை வியப்பூட்டுகிறார்கள். இதே தளத்தில் மோனிஷா ராஜேஷ், பமீலா வாட்சன், Emma Fick. நீங்களும் படியுங்கள். கலாச்சாரக் காவலர்கள் பண்பாட்டை அழித்தொழித்து தடயங்களை மாற்றி வைக்கும்முன் முதலில் இந்தியாவைச் சுற்றுங்கள், கூடவே உலகையும் சுற்றுங்கள். முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள், பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்!
அனுபந்தம்:
—————-
இரயில் பயணங்கள் பற்றி அடுத்து எழுத எந்தப் புத்தகம் வாய்ப்பு தருமென தெரியவில்லை. அதுவரை எனது சுயபெருமைகள் கேளுங்கள்:
- இந்தியாவை 7 நாட்கள் எங்கும் தங்காமல் இரவில் இரயிலில் பயணித்து, பகலில் ஊர்சுற்றி இருக்கிறேன். இரண்டு முறைகள்.
- தாய்லாந்து நாட்டின் ஒருகிளை தவிர மற்ற எல்லாவற்றிலும் இரயிலேயே பயணித்து 9 நாட்கள் சுற்றி இருக்கிறேன்.
- வியட்நாம் நாட்டை வடக்கில் இருந்து தெற்காக மொத்தமாக இரயிலேயே பயணித்து 11 நாட்கள் சுற்றியிருக்கிறேன்.
- இந்தோனேசியாவின் ஜாவா தீவைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
- உஸ்பெகிஸ்தான் நாடும் இரயில் பயணம் தான்.
- உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு இரயிலேயே 18 மணிநேரம் எல்லை கடந்திருக்கிறேன்.
- தைவான் நாட்டைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து அடுத்து இரயிலில் பயணிக்க இப்போது எனது குறிப்புகளில் 9 நாடுகள் உள! வேந்தர்க்கு வேண்டும் பொழுது!
– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)