ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம்

புதிதாக அறிமுகமாகியுள்ள ஆப்பிள் 16இ திறன்பேசி, ஆப்பிள் நிறுவனத்தின் நாமே பழுதுபார்க்கும் திட்டத்தில் இணைகிறது.
தேவைக்கு அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கருவிகளை வாங்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. சில திறன்பேசிகள் ஓர் ஆண்டுக்கு மேல் சரியாக வேலை செய்வதில்லை. நீடித்து உழைக்கும் தரமான திறன்பேசிகள் என்றாலும் பலர் புதுப்புது வசதிகளைப் பயன்படுத்த ஆசைப்பட்டு புதுமாதிரி திறன்பேசி சந்தைக்கு வந்தவுடன் மாற்றிவிடுகிறார்கள். கை தவறி கீழே போடுவது, தண்ணீரில் போடுவது என்று புதுத் திறன்பேசியை உடைத்துவிட்டுப் புதிதாக வாங்குவோரும் உண்டு. இதன் காரணமாக மின்னணுக் குப்பைகள் பெருகுகின்றன. இக்குப்பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

திறன்பேசிகள் பழுதானால் அதைப் பழுது பார்த்துப் பயன்படுத்துவதை சூழலியலாளர்கள் ஊக்குவிக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனம் இதில் தனித்துவமான கட்டுப்பாடுகள் கொண்டிருந்தது. தங்கள் அங்கீகாரம் பெற்ற இடங்களைத் தவிர வேறெங்கும் ஆப்பிள் திறன்கருவிகளைப் பழுதுபார்ப்பது சாத்தியம் இல்லாது இருந்தது. ஆப்பிள் பழுதுபார்ப்பு வலையமைப்புக்கு வெளியே பழுதுபார்த்தால் வாடிக்கையாளர்கள் அந்தத் திறன்பேசியைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டது ஆப்பிள்.
இதன் விளைவாக சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தையும் இணைக்கும் விதத்தில் நாமே பழுதுபார்க்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில் முதலில் ஐபோன்கள் மட்டுமே நாமே பழுதுபார்க்கும் வகையில் இருந்தது. பின்னர் மேக் கணினிகளும் இணைந்தன. ஆப்பிள் திறன்கடிகாரம், ஏர்பாட் என ஒவ்வொன்றாக இதை விரிவுபடுத்தினார்கள்.
இவ்வரிசையில் தற்போது ஆப்பிள் 16இ திறன்பேசிகளும் இணைந்துள்ளன. இந்த நமக்கு நாமே திட்டத்தில் பழுதுநீக்கத் தேவைப்படும் கருவிகளை (tool kit) ஆப்பிள் நிறுவனமே வழங்கும். திருகு, திருகாணி, திறன்பேசியின் வரைபடம், எங்கெங்கே எந்தெந்த பாகங்கள் உள்ளன என்கிற விளக்கப்படம் எல்லாமே ஆப்பிள் கொடுத்துவிடும். திரை, மின்கலம் போன்றவற்றையும் ஆப்பிள் தளத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். இவை அனைத்தும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்றவை என்பதால் பழுது நீக்கிய பிறகு உங்கள் ஆப்பிள் அடையாளத்துடன் உள்நுழைவதற்கு ஆப்பிள் எந்தத் தடையும் சொல்லாது.
அடேங்கப்பா என்று வாழ்த்துவதற்கு முன்பு விலையையும் தெரிந்துகொள்வது நல்லது. அறுநூறு டாலர் மதிப்புள்ள ஐபோன் 16இ திறன்பேசியைப் பழுதுபார்க்கும் கருவிகள் அடங்கிய தொகுப்பை வாடகைக்குத் தருகிறது. ஒரு வார காலத்துக்கு வாடகை சுமார் ஐம்பது டாலர். திரையைச் சரிசெய்வதென்றால் அதைத் தனியாகப் பணம் செலுத்தி வாங்கவேண்டும். ஒட்டுவதற்கான பொருளும் வாங்கவேண்டும். எல்லாம் தோராயமாக முந்நூறு டாலர்கள் கணக்கு வருகிறது. திறன்பேசியின் விலையில் பாதி செலவாகிறதே என்றும் சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் உடைத்தால் முந்நூறும் அறுநூறும் சேர்ந்து மொத்தமாகப் போய்விடும் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்.
நீண்ட கால நோக்கில் பார்த்தால் இம்மாதிரி முயற்சிகள் வரவேற்கத் தக்கதே. பழுதுநீக்கத் தெரியாது எனில் அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் கொடுப்பதே சிறந்தது. தெரியும் எனில் நாமே செய்து கொள்ளலாம். புதிதாக வாங்குவதைவிட இது நிச்சயம் மேலானது. சுற்றுச்சூழல் கேடுகளைக் குறைக்க நம்மால் இயன்றதைச் செய்த திருப்தியும் கிட்டும். ஆப்பிள் திறன்பேசிகளில் விலை குறைவானது என்பதால் ஆப்பிள் 16இ பழுதுநீக்கும் பணத்துக்கும் புதிதாக வாங்கும் பணத்துக்கும் இடைவெளி குறைவாக உள்ளது. மற்ற ஆப்பிள் திறன்கருவிகளில் நாமே பழுதுநீக்கும் திட்டம் இன்னும் கூடுதல் பலன் உள்ளதாகவே இருக்கும்.
2030ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு கார்பன் நடுநிலைமை (Carbon Neutrality) என்பதை இலக்காக வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். உற்பத்தி, போக்குவரத்து அனைத்திலும் தான் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல். காடு வளர்ப்பு, கார்பன் பிடிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தல். மறுசுழற்சி, பழுதுநீக்கும் திட்டங்களை ஊக்குவித்தல். இப்படிப் பல முயற்சிகளை முன்னெடுத்து சுழிய நிகரக் கரியமில உமிழ்வை (net-zero carbon emissions) சாத்தியப்படுத்த முயல்கிறது ஆப்பிள்.
The post ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம் appeared first on செல்லினம்.